Saturday, December 1, 2012

தினசரி பயணங்களில்....


 நெடுஞ்சாலைகளையும் பேரூந்துகளையும் நீக்கி
எண்ணிக்கொள்ள முடிவதில்லை
தினசரிகளுக்குள் புதைந்துபோய்விட்ட
என் போன்றவர்களின் வாழ்க்கையை...
தோளில் சுமையுடன் வரும் தாய்க்குலங்கள்
கண்டும் காணாத பாணியில்
முகத்தை மூடிக்கொள்ளும் இளவல்கள்
பார்க்கும் கணங்களில்கொதித்துப்போகிறேன்...
ஓடும் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல்
தள்ளாடிவிழும் வயோதிபர்களை கண்டு
தந்தையின் நினைவில் மனங்கசிந்து போகிறேன்
தரிப்பிடங்களில் நின்று கையேந்தும் இளந்தளிர்களைக்கண்டு
கண் கலங்கியும் இருக்கிறேன்....
சில்லறைக்காய் சத்தமிடும் நடத்துனரும்
சில்லறைத்தனமாய் நடந்திடும் நவயுகமன்னர்களும்
என் கருத்துக்கு எட்டாதபடி தள்ளி நிற்கிறேன்...
மொத்தத்தில் என்னை விட்டு விலகி வெகுதூரம்
 நியாயம் கேட்க ஓடும் என்மனதை
இழுத்து திசைதிருப்புகிறேன்..
யன்னல் வழிக்காட்சிகளை ரசிக்க...........
தி

வார்த்தை தவறிவிட்டாய்


எங்கெல்லாம் நீதி புதையுண்டு,
அநீதி தலை தூக்கிறதோ
எங்கெல்லாம் நல்லவர்கள் கண்ணீர் வடிக்கிறார்களோ,
அங்கெல்லாம் நான் பிரசன்னமாவேன் என்று
தலைசிறந்த மேடைப்பேச்சாளனைப்போல்
கூறியிருந்தாய் அன்று!
இன்று நீயே வார்த்தை தவறிவிட்டாய்!
ஆயிரம் துயரங்கள் சூழினும் நீ வருவாய் என 
விழியெறிந்து காத்திருந்தும் நீ வரவில்லை
உயிரை உலுக்கும் துன்பங்கள்,
 நிஜத்துள் அடங்கா நிகழ்வுகள்,
 நிழலுக்குள் புதையுண்டு போன உண்மைகள்,
இவையெல்லாம் அவையேறி, அரங்கேறி
................போயின
ஆனபோதும் தேற்றிக்கொண்டோம்
"கலிகாலம் இது" என,
உள்ளுக்குள் உன் வார்த்தையின் நம்பிக்கையில்.................
ஆனால்..................
 நீதியும் அநீதியும் இடம் மாறி, உருமாறி,
உருக்குலைந்து போனதுதான் உண்மை..
பாண்டவர் மனைவி இருகையேந்தவில்லை
என வர மறுத்தாய் அன்று!
இன்று இருகையேந்தி மனங்கலங்கி
ஓராயிரம் குரல்கள் அழைத்த போதும்
 நீ வரவில்லை!
எல்லாரையும் போல நீயும்
அறிவுரைக்கு பஞ்சமின்றி உரைத்தாய்
ஒரு கீதாசாரம்.....
எது நடந்ததோ, எது நடக்கிறதோ
"அதுவெல்லாம்" என்னவென்று
உனக்கே தெரியும்
குற்றவாளிக்கூண்டில் நீதியிருக்க
தீர்ப்பு சொல்லும் நிலையில் அநீதி.........
இடர்களை ,இன்னல்களை உன்னைப்போல்
தெய்வம் ஒன்றே அறிந்திருந்தும்
 நீ கூட நிறம் மாறிவிட்டாய்..
வார்த்தை தவறிவிட்டாய்.......

தொலைந்து போனது


மழை நின்ற தெருவோரம்
விளையாடும் அந்த ஒற்றை நாய்க்குட்டி
எதற்குமே அஞ்சாத அந்த முற்றத்து ஒற்றைப்பனை
ஆற்றங்கரை மணலில் புதிதாய் முளைத்த மணல் வீடு
படிதடக்கி விழுகையில் முறிந்த என் ஒற்றைப்பல்
அம்மன் கோயிலின் கோபுரப்புறாக்கள்
ஆலமரத்தோரம் ஆடிய ஊஞ்சல்கள்
தோட்டத்தை தினமும் சுற்றிய அந்த பட்டாம் பூச்சி
வானம் பார்த்திருந்த ஒரு இரவில் பூமி வந்த எரிகல்
புத்தகத்துள்ளே பூட்ட...